Friday, May 27, 2011

ஊர் திரும்புதல்.

"நான் 10 வருஷத்துல திரும்பி போவேன்." விசு கொஞ்சம் எரிச்சலோடு சொன்னான்.
"5 வருஷம்னு முன்னாடி சொன்னியே?. கண்டிப்பா நீ திரும்பிப் போக மாட்டே." அருணுக்கு விசுவ மடக்கின திருப்தி.
"இல்லை.. நான் திரும்பி போவேன். போகணும்". தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
"சரி. எந்த ஊருக்கு திரும்பி போவ? உன் சொந்த ஊர் எது? அஞ்சு ஆறு ஊர்ல படிச்சிருக்க, மூணு ஊர்ல வேல பாத்தே. ஒரு ஊர்ல, நாலு வருஷம் சேந்தாப்ல இல்லை. இதுல ஊருக்குப்போரானாம். நான் இரவது வருஷமா கோயம்பத்தூர்ல வளந்தேன், படிச்சேன். அது தான் என் ஊரு..நான் இங்க வந்தது சீக்கிரம் காசு சம்பாதிச்சிட்டு போறதுக்கு. நான் இன்னும் மூணு நாலு வருஷத்துல திரும்பி போய்டுவேன்". "கல்யாணம் பண்ணி, கொழந்தை பொறந்தா, இந்த ஊர்ல ஒருத்தர் சம்பாதிச்சு குடும்பம் நடத்த முடியாது. இங்க இருக்கிற நம்ம மக்கள்கிட்ட பேசி பாரேன் தெரியும்"."கோயம்பத்தூர் அருமையான ஊரா இருந்திச்சு. இந்த சௌத்லருந்து வந்து ஊற நாரடிசிட்டாங்க. இவனுங்களையெல்லாம் யாரு வரச்சொன்னது ?".
"உன்னை மட்டும் இங்கருந்து யாராவது வந்து வெத்தலப்பாக்கா வச்சு கூப்புட்டாங்க ? நீ வரல, அது மாதிரிதான். யாதும் ஊரே, யாவரும் கேளிர் டா.".. அப்பாடா, அருணுக்கு பதில் சொல்லிட்டோம்.
"பாத்தியா, நீயே சொல்ற. யாதும் ஊரே, யாவரும் கேளிர்னு. அப்புறம் எதுக்கு ஊருக்கு போவேன்னு சொல்ற? உன்ன பத்தி எனக்குத் தெரியும். இப்ப இருக்கறத விட இன்னும் better
ஆகனும்னு தான் நெனப்ப.நம்ம தலைமுறைக்குள்ள இந்தியா அமேரிக்காவ முந்தும்னு எனக்கு தோணலை."...அருண் உடமாட்டான் போல.
"இல்லை டா. என் டீம்ல இருக்குற நிங், ஜியானுகேல்லாம் சீனா எவளோ முன்னேறினாலும் திரும்பி போற இடீயாவே இல்லை. அவங்களுக்கெலாம் அங்கருந்து தப்பிச்சு வந்தாப்போதும்னு இருந்திருக்காங்க. நேத்து, சாப்பிடும்போது, லூசி (அமெரிக்க பெயர் சூட்டிக்கொண்ட சீனப்பெண்.. சீனர்கள் அமெரிக்க வந்தவொடனே பண்ற மொத வேலை, அமெரிக்க பெயர் வச்சுக்கிறது.) தன் மகன், தேர்தல்னா என்னனு தனுக்கு சொல்லிக்கொடுதான்னு ஒரே பெருமையா சொன்னாங்க. நாம அப்படியில்லைல..நம்ம ஊர் முன்னேரும்டா. அங்கதாண்ட growth இருக்கு. எங்க போவேன்னெல்லாம் தெரியாது. பெங்களூரோ சென்னையோ. பாப்போம்."
"அப்ப, நம்ம ஊரு முன்னேருசுன்னா தான் போவேங்கற. ஆனா இங்க இருக்கற மாதிரி அங்க சொகுசா இருக்க நாளாகும். இங்க டிராபிக் பிரச்சனை இல்லை, pollution இல்லை."
.........................
விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. முடிவுக்கு வருவதுபோல இல்லை.

இருவரையும், அமைதியாக ராஜேந்திரன் பாத்துகொண்டிருந்தான்.
ராஜா போன லீவுக்கு ஊருக்கு போயிருந்தான். அப்ப, அவங்க அப்பா, சித்தப்பாகிட்ட சொன்னார், "நாம, மதுர வந்து நாப்பது வருஷம் ஆகப்போது. இந்த பசங்க காலேஜ் முடிச்சு, கல்யாணம் முடிஞ்சா, நாம எல்லாம் திரும்பி கருங்குலத்துக்கே போயிருவோம். அங்க போயி, கொய்யா மரம், மா மரம்லாம் இருக்குற தோப்புல ஒரு வீடு கட்டி, ஆட்டுப்பண்ணை வைக்கணும்டா செல்வராஜூ". "ஆமாம்னே. சின்னவயசுல, அய்யனோட பட்டில ஆட்டுக்கு காவல் இருப்போம்லன்னே?......போயிருவோம், போயிருவோம்" ...